ஐபிஎல் தொடரில் புதிய வரலாறு படைத்த யுஸ்வேந்திர சஹால்!

Updated: Mon, Apr 22 2024 20:48 IST
Image Source: Google

ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் ரோஹித் சர்மா 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷானும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவும் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் பின் இணைந்த திலக் வர்மா - முகமது நபி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் அதிரடியாக விளையாடி வந்த முகமது நபி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்கள் சேர்த்த நிலையில் யுஸ்வேந்திர சஹால் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் யுஸ்வேந்திர சஹால் புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

 

அந்தவகையில் இப்போட்டியில் கைப்பற்றிய விக்கெட்டின் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 200ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை யுஸ்வேந்திர சஹால் படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக முன்னாள் சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ 183 விக்கெட்டுகளையும், பியூஷ் சாவ்லா 181 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். 

ஐபிஎல் தொடரில் இதுவரை 152 போட்டிகளில் விளையாடியுள்ள யுஸ்வேந்திர சஹால் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் 40 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதே அவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை