யுவராஜ் சிங்கை பயிற்சியாளராக நியமிக்க ஆர்வம் காட்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Updated: Sun, Aug 25 2024 14:01 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து 18ஆவது சீசனுக்கான வேலைகளை ஐபிஎல் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்க்கியுள்ளன. ஏனெனில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் முழுவதுமாக கலைக்கப்பட்டு, வீரர்களுக்கான மெகா ஏலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த தொடரின் மீதான கூடுதல் எதிர்பார்ப்புளும் அதிகரித்துள்ளன்.  

இந்நிலையில், சமீபத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அணியின் தலைமை  பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை அணியில் இருந்து நீக்குவதாக அறிவித்திருந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அங்கும் வகித்து வந்த நிலையில் தற்போது பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இவரது பயிற்சிக்கு கீழ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 2020ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியும், 2021ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதைத் தவிர்த்து மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் லீக் சுற்றுடனே வெளியேறது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு சீசன்களிலும் மோசமான ஆட்டத்தின் காரணமாக அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது. இதனால் டெல்லி அணி நிர்வாகம் இம்முடிவை எடுத்திருந்தது. 

இதனையடுத்து அந்த அணி ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தங்கள் அணியின் பயிற்சியாளரை தேடும் முயற்சியிலும் ஆர்வம் காட்டிவருகிறது. அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலைமை பயிற்சியாளராக நியமிக்க ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் யுவராஜ் சிங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்க அந்த அணி ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் யுவராஜ் சிங் ஏற்கெனவே டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளதால், நிச்சயம் அணியின் சூழல் குறித்து அவர் நன்கறிவார் என அந்த அணி நிர்வாகிகள் கருதுகின்றனர். இதன் காரணமாக யுவராஜ் சிங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து யுவராஜ் சிங் தனது ஓய்வை அறிவித்தார். 

அதன்பின் அவர், லெஜண்ட்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். அதேசமயம் யுவராஜ் சிங்கிற்கு பயிற்சியாளராக அதிக அனுபவம் இல்லை என்றாலும், இந்திய அணியின் இளம் வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோருடன் அவர் பணியாற்றி அவர்களின் குறைபாடுகளை பலமாக மாற்றியுள்ளார். இதன் காரணமாக அவரை பயிற்சியாளராக நியமிக்க ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டுகின்றன.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதுபோன்ற சூழ்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்களுடன் அவர் தனது கிரிக்கெட் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள முடிந்தால், இந்த அணி வரும் சீசனில் பரபரப்பை ஏற்படுத்தலாம் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், யுவராஜ் சிங் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக விரும்புகிறாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை