ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 51ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் விளாசியதுடன் முதல் விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சாய் சுதர்ஷன் 9 பவுண்டரிகளுடன் 48 ரன்களில் விக்கெட்டை இழ்ந்தார். 

Advertisement

அதன்பின் ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ஷுப்மன் கில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 76 ரன்களைச் சேர்த்திருந்த ஷுப்மன் கில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியில் மிரட்டி வந்த ஜோஸ் பட்லரும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். 

இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஸ் பட்லரும் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 64 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரும் 15 ரன்னிலும், ராகுல் திவேத்தியா 6 ரன்னிலும், ரஷித் கான் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்தேவ் உனாத்கட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக தொடங்கியதுடன் முதல் விக்கெட்டிற்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், 20 ரன்களைச் சேர்த்திருந்த டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டை இழந்தார், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷானும் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அணிக்கு நம்பிக்கையளித்தார். 

அவருடன் இணைந்த ஹென்ரிச் கிளாசெனும் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதன்பின் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 74 ரன்களைச் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத்தொடர்ந்து 23 ரன்களைச் சேர்த்த கையோடு ஹென்ரிச் கிளாசெனும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய அனிகெத் வர்மா 3 ரன்களுக்கும், கமிந்து மெண்டிஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து முகமது சிராஜின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Advertisement

Also Read: LIVE Cricket Score

இறுதியில் அதிரடியாக விளையாடிய நிதீஷ் குமார் ரெட்டி ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 21 ரன்களையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என19 ரன்களையும் சேர்த்த நிலையிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் அணி தரப்பில் முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News