ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 64ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் ஐடன் மார்க்ரம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் பறக்கவிட்டு மிரட்டினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கியதுடன், பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். 

அதேசமயம் மறுபக்கம் நிக்கோலஸ் பூரனும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். பின்னர் 10 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 117 ரன்களைச் சேர்த்த் கையோடு மிட்செல் மார்ஷ் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் பூரன் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 235 ரன்களைச் சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோர் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாய் சுதர்ஷன் மற்றும் ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாய் சுதர்ஷன் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லும் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த ஜோஸ் பட்லர் மற்றும் ஷெர்ஃபென் ரூதர்ஃபோர்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் இதில் பட்லர் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 33 ரன்களுக்கும், ரூதர்ஃபோர்ட் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய ஷாருக்கான் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் அணிக்கும் நம்பிக்கையளித்தார். ஆனால் மறுமுனையில் ராகுல் திவேத்தியா 2 ரன்னிலும், அர்ஷத் கான் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ஷாருக் கானும் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, குஜராத் டைட்டன்ஸின் தோல்வியும் உறுதியானது. இறுதியில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

Advertisement

Also Read: LIVE Cricket Score

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வில்லியம் ஓ ரூர்க் 3 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் மற்றும் ஆயூஷ் பதோனி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News