ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் ஐயர், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 207 டார்கெட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரியன்ஷ் ஆர்யா 6 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் பிரப்ஷிம்ரனுடன் ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதன்பின் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களிலும், பிரப்ஷிம்ரன் சிங் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 28 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய நெஹால் வதேரா 16 ரன்களுக்கும், ஷஷாங்க் சிங் 11 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 53 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஒமர்ஸாயும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், விப்ராஜ் நிகாம் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.