ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் ஃபார்மின்றி தடுமாறி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தார். அவருடன் இணைந்த சஞ்சு சாம்சனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

Advertisement

இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாட தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்திருந்த நிலையில், 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 67 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதீஷ் ரானாவும் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் ரியான் பராக் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹெட்மையர் 20 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பராக் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களையும், துருவ் ஜூரெல் 12 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் லோக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி அணியின் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா முதல் பந்திலேயும், அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களிலும் என ஜோஃப்ரா ஆர்ச்சரின் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான பிரப்ஷிம்ரன் சிங்கும் 17 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். 

இதனால் பஞ்சாப் அணி 43 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த நேஹல் வதேரா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நேஹல் வதேரா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல் விக்கெட்டை இழக்க, அடுத்த பந்திலேயே நேஹல் வதேரா 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 62 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

இறுதியில் சூர்யன்ஷ் ஷெட்ஜ் 2 ரன்களிலும், மார்கோ ஜான்சென் 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா, மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி நடப்பு சீசனில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News