ஸ்லோ ஓவர் ரேட்; ரஜத் பட்டிதருக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
ஐபிஎல் தொடரில் நெற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி 67 ரன்களையும், கேப்டன் ரஜத் பட்டிதார் 64 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்மா 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களைச் சேர்த்தது. மும்பை தரப்பில் ஹர்திக் பாண்டியா, டிரென்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். அந்த அணியின் திலக் வர்மா 56 ரன்களையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 42 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் அணியின் வெற்றியிலும் பங்காற்றிய ரஜத் பட்டிதார் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் செய்த முதல் குற்றம் என்பதால் குறைந்தபட்ச அபராத தொகையை மட்டுமே பிசிசிஐ வழங்கியுள்ளது. முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்திற்கு இரண்டு முறையும், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் ஆகியோருக்கு தல ஒருமுறையும் ஸ்லோ ஓவர் ரெட்டிற்கான அபராதம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.