ஸ்லோ ஓவர் ரேட்: லக்னோ அணி கேப்டன், வீரர்களுக்கு அபராதம்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள வான்கடே கிரிகெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியான் ரிக்கெல்டன் 58 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 54 ரன்களையும் சேர்க்க, இறுதில் நமன் தீர் 25 ரன்களையும், கார்பின் போஷ் 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 35 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியைத் தழுவியதுடன் மற்றொரு மோசமான செய்தியும் வெளியாகியுள்ளது. அதன்படி இப்போட்டியில் லக்னோ அணி பந்துவீச்சாளர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் அணியின் கேப்டன் ரிஷப் பந்திற்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் ரிஷப் பந்திற்கு நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இரண்டாவது முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Also Read: LIVE Cricket Score
இதுதவிர்த்து இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த அனைத்து வீரர்களுக்கும், இம்பேக்ட் வீரர் உள்பட அனைவருக்கு தலா ரூ.6 லட்சமும் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்தின் ஃபார்ம் பெரும் கேள்விக்குறியாக உள்ள நிலையில் தற்போது அவரது கேப்டன்சியின் காரணமாக இரு முறை அபராதத்தை பெற்றுள்ளது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.