ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் கருண் நாயர் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் அந்த அணி 34 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

அதன்பின் கேஏல் ராகுல் 2 பவுண்ட்ரி, 2 சிக்சர்களுடன் 38 ரன்களையும், அபிஷேக் போரல் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 49 ரன்களையும், கேப்டன் அக்ஸ படேல் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 34 ரன்களிலும் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களையும், அஷுதோஷ் சர்மா 15 ரன்களையும் சேர்க்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை சேர்த்தது.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் காயம் காரணமாக போட்டியில் இருந்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். 

அதன்படி இன்னிங்ஸின் 6ஆவது ஓவரை விப்ராஜ் நிகம் வீசிய நிலையில், ஓவரின் முதலிரண்டு பந்துகளில் சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசி மிரட்டி இருந்தார். அதன்பின் மூன்றாவது பந்தை சஞ்சு சாம்சன் கட்ஷாட் அடிக்க முயற்சி செய்த நிலையில், இடுப்பு பகுதியில் காயத்தை சந்தித்திருந்தார். இருப்பினும் அடுத்த பந்தை எதிர்கொண்ட அவரால் நடக்க முடியாத காரணத்தால் பெவிலியனுக்கு திரும்பினார். 

ஏற்கெனவே இந்த சீசனின் முதல் மூன்று போட்டிகளில் காயம் காரணமாக இம்பேக்ட் வீரராக மட்டுமே விளையாடி வந்த சஞ்சு சாம்சன், அதன்பின் மீண்டும் முழு உடற்தகுதியை எட்டி அணியின் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் அவர் தற்சமயம் காயத்தை சந்தித்துள்ளதால், எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. ஒருவேளை அவரது காயம் தீவிரமடையும் பட்சத்தில் அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கே), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், நிதிஷ் ராணா, வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே

இம்பேக்ட் வீரர்கள் - ஷுபம் துபே, யுத்வீர் சிங் சரக், ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, குணால் சிங் ரத்தோர்

டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் லெவன்: ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க், அபிஷேக் போரெல், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா.

Advertisement

இம்பேக்ட் வீரர்கள் - முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, சமீர் ரிஸ்வி, டோனோவன் ஃபெரீரா, திரிபுரானா விஜய்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News