டி20 கிரிக்கெட்டில் முதல் ஆசிய வீரராக சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் 15 ரன்னிலும், ரியான் பராக் 30 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 75 ரன்களைச் சேர்த்த கையோடு பெவிலியன் திரும்பினார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துருவ் ஜூரெல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை மட்டுமே சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் பில் சால்ட் அதிரடியாக விளையாடி 65 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 40 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி அரைசதம் கடந்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அந்தவகையில் இது விராட் கோலியின் 100ஆவது டி20 அரைசதமாகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 அரைசதங்களை விளாசிய இரண்டாவது வீரர் மற்றும் முதல் ஆசியர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் 108 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள்
- டேவிட் வார்னர் - 108
- விராட் கோலி - 100
- கிறிஸ் கெயில் - 99
இதுதவிர்த்து, இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 66ஆவது 50+ ஸ்கோரை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக 50+ ஸ்கோரை அடித்த வீரர் எனும் டேவிட் வார்னரின் சாதனையை சமன்செய்துள்ளார். முன்னதாக டேவிட் வார்னர் 66 முறை (4 சதம் + 62 அரைசதங்கள்) 50+ ஸ்கோரை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் விராட் கோலி (8 சதம் + 58 அரைசதங்கள்) அதனை சமன்செய்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
ஐபிஎல் தொடரில் அதிக 50+ ஸ்கோர்கள்
- டேவிட் வார்னர் - 66
- விராட் கோலி - 66
- ஷிகர் தவான் - 53
- ரோஹித் சர்மா - 45
- ஏபிடி வில்லியர்ஸ் - 43