கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற விதர்பா அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய விதர்பா அணிக்கு அதர்வா டைடே மற்றும் அமன் மொகெடே இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் மொகெடே 19 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய துருவ் ஷோரே 18 ரன்னிலும், டேனிஷ் மலேவர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் அதர்வா டைடேவுடன் இணைந்த யாஷ் ரத்தோட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

Advertisement

பின்னர் இந்த போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட யாஷ் ரத்தோட் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 91 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் அக்‌ஷர் வத்கர் 5 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் அதர்வா டைடே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். 

Also Read: LIVE Cricket Score

இதன் மூலம் விதர்பா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 280 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள  அதர்வா டைடே 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 118 ரன்களுடனும், யாஷ் தாக்கூர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் மனவ் சுதர் 3 விக்கெட்டுகளையும், அகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News