IRE vs SA, 1st ODI: சதத்தை தவறவிட்ட ரிக்கெல்டன், ஸ்டப்ஸ்; அயர்லாந்துக்கு 272 டார்கெட்!
அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன.
இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று தொடங்கிய இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரியான் ரிக்கெல்டன் - டோனி டி ஸோர்ஸி இனை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸோர்ஸி 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா 4 ரன்களிலும், ரஸ்ஸி வேண்டர் டுசென் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 39 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ரிக்கெல்டனுடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களையும் கடந்து அசத்தினர்.
மேற்கொண்டு இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 152 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய நிலையில், தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் ரிக்கெல்டன் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 91 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 79 ரன்களை எடுத்த நிலையில் விக்கெடை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜோர்ன் ஃபோர்டுயின் 28 ரன்களையும், லுங்கி இங்கிடி 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை மட்டுமே சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்க் அதிர் 4 விக்கெட்டுகளையும், கிரெய்க் யங் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி அயர்லாந்து அணியானது விளையாடவுள்ளது.