முன்னணி வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை - இர்ஃபான் பதான் சாடல்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடேவில் நடைபெற்ற நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை எடுத்தது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா அணியும் 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னார் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 174 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்காக நியமிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 121 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழப்பது இதுவே முதல் முறையாகும். அதேசமயம் நியூசிலாந்து அணியும் இந்தியாவில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றுவதும் இதே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் உள்ளூர் போட்டிகளில் விளையாடாததே தோல்விக்கு காரணம் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் மறைமுகமாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,”நேற்று யூசுஃப் பதான் என்னிடம் ஒரு உறுதியான உரையாடலை மேற்கொண்டிருந்தார். அவர் உள்நாட்டு கிரிக்கெட்டைப் பற்றி சரியான கருத்தை தெரிவித்தார் - ஏனெனில் நாம் புல்வெளி ஆடுகளத்திலோ அல்லது தட்டையான ஆடுகளத்திலோ விளையாடுகிறோம், ஆனால் அரிதாகவே இதுபோல மேல்தளங்களில் விளையாடுகிறோம். மேலும், முன்னணி வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. அது நம்மை நீண்ட காலத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும்” என்று கூறினார்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்விக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பிசிசிஐ உத்திரவிட்டிருந்தது. ஆனால் அப்போதும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதனை மையப்படுத்தியே இர்ஃபான் பதான் தற்சமயம் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.