பிஎஸ்எல் 2025: முன்ரோ, ஹோல்டர் அசத்தல்; கலந்தர்ஸை வீழ்த்தி யுனைடெட் அசத்தல் வெற்றி!

Updated: Sat, Apr 12 2025 11:41 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் மற்றும் முகமது நயீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் ஒரு ரன்னிலும், நயீம் 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய அப்துல்லா ஷஃபிக் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், அடுத்து களமிரங்கிய டேரில் மிட்செல் 13 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், சிக்கந்தர் ரஸா 23 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த அப்துல்லா ஷஃபீக் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 66 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அப்துல்லா ஷஃபீக் விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் லாகூர் கலந்தர்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு சாஹிப்சாதா ஃபர்ஹான் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆண்ட்ரிஸ் கஸ் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஃபர்ஹானுடன் இணைந்த காலின் முன்ரோவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினார். இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், சாஹிப்சாதா ஃபர்ஹான் 3 சிக்ஸர்களுடன் 25 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் ஜோடி சேர்ந்த காலின் முன்ரோ - சல்மான் ஆகா இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் காலின் முன்ரோ தனது அரைசதத்தை பூர்த்தி செய்தும் அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த காலின் முன்ரோ 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 59 ரன்களையும், சல்மான் ஆகா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை