நேற்றிரவு நடந்தது இன்னும் வலியை கொடுக்கிறது - ஷுப்மன் கில்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி . இத்தோல்வினால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் பட்டையை கிளப்பிய இந்திய அணி 9 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று அசத்தியதுடன் அரையிறுதியில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து மிரட்டியது.
இதனால் வரலாற்றில் முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்த இந்திய அணியில் ரோஹித் முதல் ஷமி வரை ஏறக்குறைய அனைத்து வீரர்களுமே உச்சகட்ட ஃபார்மில் இருந்தனர். இதன் காரணமாக நிச்சயமாக இம்முறை 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வென்று வரலாறு படைப்போம் ரசிகர்களின் நம்பிக்கையும் உச்சத்தை தொட்டது.
ஆனால் மீண்டும் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வேலையை காட்டிய இந்தியா பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆரம்பத்திலேயே வெற்றியை நழுவ விட்டது. மறுபுறம் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலியா 6ஆவது கோப்பையை வென்று உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது.
அந்த வகையில் சொந்த மண்ணில் இந்திய அணியினர் தோல்வியை சந்தித்தது மைதானத்தில் இருந்த ஒரு லட்சம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் 100 கோடி இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களையும் உடைத்தது. இந்நிலையில் 16 மணி நேரங்கள் கடந்தும் இறுதிப்போட்டியில் சந்தித்த தோல்வி தமக்கு வலியை கொடுப்பதாக இளம் வீரர் ஷுப்மன் கில் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “16 மணி நேரங்கள் கடந்து விட்டது. ஆனால் நேற்றிரவு நடந்தது இன்னும் வலியை கொடுக்கிறது. சில நேரங்களில் உங்களுடைய அனைத்தையும் கொடுத்தாலும் அது போதாது. எங்களுடைய உயர்ந்த லட்சியத்தில் சிறிது முன்பாக விழுந்து விட்டோம்.
ஆனால் எங்களுடைய பயணத்தின் ஒவ்வொரு அடியும் எங்கள் அணியின் போராட்டத் தன்மை மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்றாக உள்ளது. எங்களின் நம்ப முடியாத ரசிகர்கள் உயர்விலும் தாழ்விலும் கொடுக்கும் ஆதரவே எங்களின் உலகம் என்று அர்த்தம். இது முடிவல்ல. நாம் வெற்றி பெறும் வரை இது முடிவதில்லை. ஜெய்ஹிந்த்”என்று கூறியுள்ளார்.