இந்த வெற்றி எங்கள் அனைவருக்குமே முக்கியமானது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 102 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 50 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்லீன் தியோல் தலா 45 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் 98 ரன்களையும், எம்மா லம்ப் 68 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் அந்த அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டநாயகி விருதை வென்றார். அதன்பின் பேசிய அவர், “எங்கள் அனைவருக்கும் இது ஒரு சிறந்த தொடராக அமைந்தது. தொடர் முழுவதும் நாங்கள் விளையாடிய விதத்தில் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் ஒரு அணியாக ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடி வருகிறோம். அதற்கான பலனை பார்க்க முடிகிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கிராந்தி கவுட் மற்றும் ஸ்ரீ சாரனி ஆகியோர் டபிள்யூபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தனர். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால், அவர்கள் நாட்டிற்கும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நாங்கள் நினைத்தோம். அதற்கேற்றவாரு அவர்கள் தங்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டனர். மேலும், ஃபீல்டிங் பயிற்சியாளருக்கும் இந்த வெற்றியில் பங்கு இருக்கிறது. இந்த வெற்றி எங்கள் அனைவருக்குமே முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score