தோனியை சம்மதிக்க வைப்பதை விட தினேஷ் கார்த்திக்கை சம்மதிக்க வைப்பது எளிது - ரோஹித் சர்மா!

Updated: Thu, Apr 18 2024 13:43 IST
தோனியை சம்மதிக்க வைப்பதை விட தினேஷ் கார்த்திக்கை சம்மதிக்க வைப்பது எளிது - ரோஹித் சர்மா! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20  அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மெலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளும் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. 

அந்தவகையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் விக்கெட் கீப்பருக்கான இடத்தை யார் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் தற்சமயம் அதிகரித்துள்ளது. 

ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான் போன்ற வீரர்களு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம் எஸ் தோனியும் அபாரமான ஃபினிஷிங்கைக் கொடுத்து வருகிறார். இதனால் தோனிக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஒருசிலர் தங்களது கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர். 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் உடனான நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கலந்துகொண்டார். அப்போது, ஐபிஎல் தொடர் குறித்த விவாதத்தின் போது தோனியை பற்றிய பேச்சுகள் வந்தது. அப்போது, மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 பந்துகள் மீதமிருக்கும் போது தோனி களமிறங்கினார். அந்த 4 பந்துகளில் 20 ரன்களை விளாசி சென்றார்.

கடைசியில் பார்க்கும் போது தோனி சேர்த்த அந்த 20 ரன்கள் தான் இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசமாக அமைந்தது. மேலும் தினேஷ் கார்த்திக்கும் அதிரடியாடியாக விளையாடி அணியை ஏறத்தாழ வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். இதனால் இந்த உலகக்கோப்பை தொடரில் அவர்கள் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “டி20 உலகக்கோப்பையில் தோனியை சமாதானப்படுத்தி விளையாட வைப்பது எளிதல்ல. அவர் வெஸ்ட் இண்டீஸ் வருவாரா என்று தெரியாது. ஆனால் நிச்சயம் அமெரிக்கா வருவார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அண்மை காலங்களில் அதிகமாக கோல்ஃப் விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார்.

 

தோனியை சமாதானப்படுத்துவதை விடவும் தினேஷ் கார்த்திக்கை சமாதானம் செய்வது எளியது. கடந்த 2 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்று கூறினார். முன்னதாக ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது கூட தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ததை பாராட்டும் விதமாக ரோஹித் சர்மா பேசிய சில விஷயங்கள் ஸ்டம்ப் மைக்கில் பதிவானதுடன், அக்காணொளியும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் கில்கிறிஸ்ட் ரோஹித் சர்மாவின் இந்த உரையாடலானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை