இந்திய அணி மிகவும் பாதுகாப்பான கரங்களில் உள்ளது - கவுதம் கம்பீர்!
இந்திய கிரிக்கெட் அணி, தற்போது கேப்டன்ஸி சர்ச்சையில் சிக்கி தள்ளாடி வருகிறது. ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி, எந்த வித முன் அறிவிப்புமின்றி நீக்கப்பட்டது தான் சர்ச்சைகளை ஆரம்பித்து வைத்தன. அவருக்கு பதிலாக இனி டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மட்டுகளுக்கு ரோகித் சர்மா, கேப்டனாக செயல்பட உள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகின்றன. ஒரு தரப்பு, இந்தியாவின் மிகச் சிறந்த வீரர் கோலி. அணிக்காக அவர் தலைமை பொறுப்பு வகித்து பல வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். அப்படி பட்டவர் அவமதிக்கப்பட்டு விட்டார் என்று சொல்லப்படுகிறது. மறுதரப்பில் ரோஹித் கேப்டன்சிக்கு தகுதியனவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிசிசிஐ-யின் முடிவுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், விராட் கோலியை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்திலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "தற்போது இந்திய அணிக்கு இரண்டு வித கேப்டன்கள் இருப்பது நல்ல விஷயம் என்று கருதுகிறேன். டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மட்டுகளில் அணியைத் திறம்பட உருவாக்குவதிலும் வழிநடத்துவதிலும் ரோஹித்துக்குப் போதுமான கால அவகாசம் கிடைக்கும்.
ரோகித் சர்மா, ஒரு கேப்டனாக இந்தியாவுக்காக சிறப்பாக செயல்படுவார் என நான் நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மட்டுகளில் இந்திய அணி மிகவும் பாதுகாப்பான கரங்களில் உள்ளன. இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார் ரோஹித். அது நமக்கு உணர்த்துவது ஒன்று தான். மற்ற கேப்டன்களை விட ரோகித் எதையோ ஒன்றை மிகச் சரியாக செய்கிறார்.
ரோஹித் எப்போதும் சாந்தமாகவும் அமைதியாகவும் செயல்படக் கூடியவர். இதனால் தன்னைச் சுற்றி அனைத்தையும் ரிலாக்ஸாக வைத்திருப்பார். அவர் எப்போதும் தனக்கு கீழ் விளையாடும் வீரர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க மாட்டார். அவர் பொதுவாகவே ரிலாக்ஸாக இருக்கும் கேரக்டர் என்பதால் மொத்த அணியும் அதிலிருந்து பயன் பெறும்" என்று கூறியுள்ளார்.