எப்போதும் போல் இதுவும் ஒரு போட்டி தான் - பென் ஸ்டோக்ஸ்!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில்முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இரு அணிகளும் சமபலத்துடன் மோதி வருவதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறுவதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதுவரை இங்கிலாந்து அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டோக்ஸ் 13 சதம், 31 அரைசதங்கள் என 6251 ரன்களையும், பந்துவீச்சில் 197 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். நாளைய போட்டியின் மூலம் 100ஆவது டெஸ்டில் விளையாடும் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்டில் விளையாடிய 16ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறவுள்ளார்.
இந்நிலையில் தனது 100ஆவது டெஸ்ட் போட்டி குறித்து பேசிய ஸ்டோக்ஸ், “ஒவ்வொரு டெஸ்டும் அடுத்த போட்டியைப் போல் முக்கியமானது. என்னைப் பொறுத்தவரையில் இதுவும் எனக்கு மேலும் ஒரு போட்டிதான். ஏனெனில் இதற்கடுத்தது 101 ஆக இருக்கும். இது மிகப்பெரிய இலக்காக தோன்றலாம், ஆனால் 99, 100 அல்லது 101 என்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது
நான் இந்த விளையாட்டில் மேலும் கொஞ்சம் பிரதிபலிக்கும் நேரம் வரும். நான் இன்னும் விளையாடிக்கொண்டும், நிறைய சாதிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன், பிறகு அணியை வழிநடத்தி, தனிநபர்கள் வெற்றி பெறுவதற்கான சிறந்த தளத்தை அவர்களுக்குக் கொடுப்பது போன்றவற்றில் என்னுடைய எண்ணங்கள் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜோ ரூட் விலகியதைத் தொடர்ந்து, அணியின் புதிய டெஸ்ட் கேபடனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார். அதன்பின் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் இணைந்தார். பென் ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் கூட்டணி இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 போல் அதிரடியாக விளையாடும் பாஸ்பால் அனுகுமுறைய பின்பற்றி வெற்றிகளை குவித்து வருகிறது. அதன்படி இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள பென் ஸ்டோக்ஸ் 14 வெற்றிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.