சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட், ரோஹித் இருப்பார்கள்- ஜெய் ஷா உறுதி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இத்தொடரை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.
இருப்பினும் இவ்விரு வீரர்களும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இந்திய அணியானது அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தயாராகி வருகிறது. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கொண்டு ஐசிசி தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்துள்ள அணிகள் பலப்பரீட்சை நடத்தும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நிச்சயம் விளையாடுவார்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியின் முன்னேற்றத்தை மனதில் வைத்து அடுத்ததாக நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெல்வதே இலக்காக நிர்ணயித்துள்ளோம். இரண்டு தொடர்களிலும் சீனியர் வீரர்களுடன் இணைந்து இளம் வீரர்கள் விளையாடுவார்கள். மேலும் வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் நிச்சயம் விளையாடுவார்கள். என்னை பொறுத்தவரை இந்திய அணி அனைத்து ஐசிசி தொடர்களிலும் வெற்றிபெற வேண்டும்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்திய கிரிக்கெட்டில்தான் மிகப்பெரிய பெஞ்ச் வலிமை உள்ளது. தற்போதைய டி20 அணியில் இருந்து 3 வீரர்கள் மட்டுமே ஜிம்பாப்வே தொடருக்கு பயணிக்கிறார்கள். தேவைப்பட்டால் ஒரே நேரத்தில் 3 அணிகளை நம்மால் விளையாட வைக்க முடியும். ஏற்கனவே இந்திய அணி மாற்றத்திற்கு தயாராகிவிட்டது. 3 ஜாம்பவான் வீரர்கள் ஓய்வை அறிவித்துவிட்டனர். ரோஹித் சர்மாவின் ஓய்வுக்குப் பிறகு, ஹர்திக் பாண்டியா டி-20 சர்வதேச அணியின் கேப்டனாக வருவாரா இல்லையா என்பதை தேர்வாளர்கள் முழுமையாக ஆராய்ந்து முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.