ஏசிசி தலைவராக ஜெய் ஷாவின் பதவிக்காலம் நீட்டிப்பு!

Updated: Wed, Jan 31 2024 19:45 IST
ஏசிசி தலைவராக ஜெய் ஷாவின் பதவிக்காலம் நீட்டிப்பு! (Image Source: Google)

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) பொதுக்கூட்டம் இன்று இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷா-வின் பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தாண்டுடன் ஜெய் ஷாவின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பிசிசிஐ செயலாளராக செயல்பட்டு வரும் ஜெய் ஷா, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஆசியா கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், ஜெய் ஷாவின் நீடிப்பு இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வாவினால் இரண்டாவது முறையாக முன்மொழியப்பட்டது. அதனை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்து ஜெய் ஷா கூறுகையில், “என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கிரிக்கெட் இன்னும் ஆரம்ப நிலையில் இருக்கும் சில நாடுகளின் மீது சிறப்பு கவனம் செலுத்தி அதன் முழு வளர்ச்சியை உறுதி செய்வதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஆசியா முழுவதும் கிரிக்கெட்டை வளர்ப்பதில் ஏசிசி கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த 2019 முதல் பிசிசிஐ செயலாளராக இருந்துவரும் ஜெய் ஷா, 2021ஆம் ஆண்டு முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு வருகிறார். வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசன் கடந்த 2021ஆம் ஆண்டு பதவி விலகியதில் இருந்து தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்ற இளம் நிர்வாகி என்ற பெருமையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை