மான்செஸ்டர் டெஸ்ட்: சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
Joe Root Record: மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் முன்னாள் ஜாம்பவான்களான ரிக்கி பாண்டிங் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் வரலாற்று சாதனைகளை நோக்கி கண்காணித்து வருகிறார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
இதனால் இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும், இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
அதன்படி மான்செஸ்டர் டெஸ்டில் ஜோ ரூட் மேற்கொண்டு 120 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகா ரன்களைக் குவித்த இரண்டாவது வீரர் எனும் சாதனையைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 13,278 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்தில் உள்ளார். அதேசமயம் ஜோ ரூட் 13,259 ரன்களைச் சேர்த்து இந்த பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்
- சச்சின் டெண்டுல்கர் -15,921 ரன்கள்
- ரிக்கி பாண்டிங் -13,378 ரன்கள்
- ஜாக்ஸ் காலிஸ் -13,289 ரன்கள்
- ராகுல் டிராவிட் -13,288 ரன்கள்
- ஜோ ரூட் -13,259 ரன்கள்
இதுதவிர்த்து இந்த டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் மேற்கொண்டு இரண்டு அரைசதங்களைப் பதிவுசெய்யும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களைப் பதிவுசெய்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன்செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது சச்சின் டெண்டுல்கர் 68 அரைசதங்களுடன் முதலிடத்தில் இருக்கும் நிலையில், ஜோ ரூட் 66 அரைசதங்களை கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள்
- சச்சின் டெண்டுல்கர் - 68 அரை சதங்கள்
- ஜோ ரூட் - 66 அரை சதங்கள்
- ஷிவ்நரைன் சந்தர்பால் - 66 அரை சதங்கள்
- ராகுல் டிராவிட் - 63 அரை சதங்கள்
- ஆலன் பார்டர் - 63 அரை சதங்கள்
Also Read: LIVE Cricket Score
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, லியாம் டௌசன், பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.