ENG vs SL: மீண்டும் சதம் விளாசி வரலாறு படைத்த ஜோ ரூட்!

Updated: Sat, Aug 31 2024 20:38 IST
Image Source: Google

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள லார்ஸ்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த் இங்கிலாந்து அணியானது ஜோ ரூட் மற்றும் கஸ் அட்கின்சனின் அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 427 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்களையும், கஸ் அட்கின்சன் 118 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வரும் இலங்கை அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் கமிந்து மெண்டிஸ் 74 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸில் 196 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதேசமயம் நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஜோ ரூட் அபாரமாக விளையாடியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிகெட்டில் தனது 34ஆவது சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன் மூலம் இங்கிலாந்து அணியானது 251 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

இதன்மூலம் இங்கிலாந்து அணி 483 ரன்களை இலங்கை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இதனைத்தொடர்ந்து இலங்கை அணியானது இமாலய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சதம் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளாசும் 34ஆவது சதம் இதுவாகும். 

இதன்மூலம், இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் 33 சதங்களை அடித்து முதலிடத்தில் இருந்த நிலையில், அதனைத் தற்போது ஜோ ரூட் முறியடித்து புதிய சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் கெவின் பீட்டர்சன் 23 சதங்களுடன் மூன்றாம் இடத்தில் தொடர்கிறார். 

இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்துள்ள வீரர்கள்

  • ஜோ ரூட் - 34 சதங்கள்
  • அலெஸ்டர் குக் - 33 சதங்கள்
  • கெவின் பீட்டர்சன் - 23 சதங்கள்
  • வால்லி ஹாம்மண்ட் - 22 சதங்கள்
  • காலின் கௌட்ரி - 22 சதங்கள்

 

அதேசமயம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய 6ஆவது வீரர் எனும் சாதனையை முன்னாள் ஜாம்பவான்களுடன் ஜோ ரூட் பகிர்ந்துள்ளார். இதற்கு முன் பாகிஸ்தானின் யூனிஸ் கான், இந்திய அணியின் சுனில் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸுன் பிரையன் லாரா மற்றும் இலங்கை அணியின் மஹீலா ஜெயர்வர்தனே ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சதங்களை விளாசி 6ஆம் இடத்தில் தொடர்வது குறிப்பிடத்தக்கது. 

 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்

  • சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 51 சதங்கள்
  • ஜாக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 45 சதங்கள்
  • ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 41 சதங்கள்
  • குமார் சங்கக்கார (இலங்கை) - 38 சதங்கள்
  • ராகுல் டிராவிட் (இந்தியா) - 36 சதங்கள்
  • யூனிஸ் கான் (பாகிஸ்தான்) - 34 சதங்கள்
  • சுனில் கவாஸ்கர் (இந்தியா) - 34 சதங்கள்
  • பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) - 34 சதங்கள்
  • மஹீலா ஜெயவர்த்தனே (இலங்கை) - 34 சதங்கள்
  • ஜோ ரூட் (இங்கிலாந்து) - 34 சதங்கள்*

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை