சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 06ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. அந்தவகையில் இந்தப் போட்டியில் ஜோ ரூட் 96 ரன்கள் எடுத்தால், சகநாட்டு வீரரான அலஸ்டர் குக் மற்றும் இலங்கை அணியின் குமார் சங்கக்கார ஆகியோரை முந்தி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடிப்பார்.
இதுவரை, இங்கிலாந்து அணிக்காக ஜோ ரூட் 145 டெஸ்ட் போட்டிகளில் 265 இன்னிங்ஸ்களில் விளையாடி 50.93 சராசரியில் 12,377 ரன்களை எடுத்துள்ளார். அதேசமயம் குமார் சங்கக்காரா 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,400 ரன்களுடன் 06ஆம் இடத்திலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,472 ரன்களுடன் 5ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிராவிட் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு
இந்தப் போட்டியில் ஜோ ரூட் மேற்கொண்டு இரண்டு அரைசதங்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஐம்பது பிளஸ் ஸ்கோரை அடித்தவர் என்ற அடிப்படையில் ராகுல் டிராவிட்டை முந்தி நான்காவது இடத்தைப் பிடிப்பார். அந்த வகையில் ஜோ ரூட் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சதங்கள் மற்றும் 64 அரை சதங்களை என 98 ஐம்பது பிளஸ் ஸ்கோர்களை அடித்துள்ளார். இதில் ராகுல் டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெயரில் 99 ஐம்பது பிளஸ் ஸ்கோரை அடித்துள்ளார்.
ஜாம்பவான்களின் சாதனையை முறிடியக்கும் வாய்ப்பு
Also Read: Funding To Save Test Cricket
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் தற்போது 34 சதங்களை விளாசி கூட்டாக ஆறாவது இடத்தில் உள்ளார். அதேசமயம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர், பிரையன் லாரா, மஹேல ஜெயவர்த்தனே மற்றும் யூனிஸ் கான் உள்ளிட்ட ஜாம்பவான்களும் 34 சதங்களை அடித்துள்ளனர். இந்நிலையில் ஜோ ரூட் மேலும் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் அவர்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.