தனக்கு பிடித்த மூன்று வீரர்கள் யார் என்பது குறித்து ஜோஸ் பட்லர் ஓபன் டாக்!
கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இயான் மோர்கன் தலைமையில் கைப்பற்றிய இங்கிலாந்து அணியானது, இம்முறை ஜாஸ் பட்லரின் தலைமையில் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது.
ஜாஸ் பட்லர் தலைமையிலான இந்த இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் பார்க்கப்பட்டு வரும் இவ்வேளையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த 3 பேட்ஸ்மேன்கள் குறித்து ஜாஸ் பட்லர் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஒருநாள் கிரிக்கெட்டில் சில வீரர்கள் தங்களுக்கே உரித்தான மிகச்சிறப்பான திறன்களுடன் களத்தில் அற்புதமாக பேட்டிங் செய்வார்கள். அந்த வகையில் நான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் ஆகிய மூவரையும் பார்த்து ரசித்திருக்கிறேன். அவர்களது ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ரோஹித் சர்மாவிடம் எனக்கு பிடித்தது அவருடைய புல் ஷாட் தான். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஸ்கோர்களை எளிதாக அடிக்கும் அவர் புல் ஷாட் அடிப்பதில் சிறந்தவர். அவரது அந்த ஷாட் எனக்கு மிகவும் பிடிக்கும் அவருடைய பேலன்ஸ், டைமிங். பவர் எல்லாம் அந்த ஒரு ஷாட்டில் மிக அருமையாக இருக்கும்.
ரிஷப் பந்த் எப்பொழுதுமே எந்த ஒரு அணிக்கு எதிராகவும் விளையாடும் போது பயமின்றி களத்தில் எதிரணியின் பவுலர்களுக்கு எதிராக அட்டாக்கிங் செய்து விளையாடுவார். அவரது அந்த மனநிலையுடன் கூடிய அதிரடியான ஆட்டம் தனக்கு பிடிக்கும்.
ஸ்கொயர் லெக் மற்றும் மிட் விக்கெட் திசையில் டி காக் மிகவும் பலம் வாய்ந்த வீரர். அந்த ஏரியாவில் பந்து வந்தால் நிச்சயம் அவரால் பிக்கப் ஷாட் மூலம் சிக்ஸ் அடிக்க முடியும். அதை பலமுறை அவர் செய்தும் காட்டியுள்ளார். அந்த வகையில் அவரது அந்த பேட்டிங் ஸ்டைலும் எனக்கு பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.