பாகிஸ்தான் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 04ஆம் தேதி தொடங்கிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 

Advertisement

இதில் மெல்போர்னில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 8) அடிலெய்டில் நடைபெறவுள்ளது. 

Advertisement

ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று அசத்திய நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும். அதேசமயம் பாகிஸ்தான் அணியும் இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை இழக்கும் நிலையில் இருந்து தப்பிக்கும் என்பதால், நிச்சயம் இப்போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடினமாக போராடும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியானது இத்தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் பாட் கம்மின்ஸ், வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பேட்டர்கள் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. 

இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை ஜோஷ் இங்கிலிஸ் வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் மிட்செல் மார்ஷ் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில், ஆஸி அணியை ஜோஷ் இங்கிலிஸ் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது மூன்றாவது ஒருநாள் போட்டிக்கும் ஜோஷ் இங்கிலிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன், முதலிரு போட்டிகளுக்கு மட்டும்), சீன் அபோட், கூப்பர் கொனொலி, ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ் (மூன்றாவது போட்டிக்கு கேப்டன்), மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.

Advertisement

ஆஸ்திரேலிய டி20 அணி: சீன் அபோட், ஸேவியர் பார்ட்லெட், கூப்பர் கானொலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ் (கேப்டன்), ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News