இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் முதல் அரையிறுதி போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய கேரளா அணி முதல் இன்னிங்ஸில் 457 ரன்களைக் குவித்த நிலையில் ஆல் அவுட்டனது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது அசாருதீன் 20 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 177 ரன்களையும், கேப்டன் சச்சின் பேசி 69 ரன்களையும், சல்மான் நிஷார் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். குஜராத் அணி தரப்பில் நாக்வஸ்வல்லா 3 விக்கெட்டுகளையும், கேப்டன் சிந்தன் கஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய குஜராத் அணிக்கு பிரியங்க் பாஞ்சல் - ஆர்யா தேசாய் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 73 ரன்களை சேர்த்த கையோடு ஆர்யா தேசாய் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்திய பிரியங்க் பாஞ்சலும் 148 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்கள் ரன்களை சேர்க்க முடியாமல் சோபிக்க தவறினர். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் குஜராத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்களைச் சேர்த்திருந்தது.

அதன்பின் 28 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை ஜெய்மீத் படேல் 74 ரன்களுடனும், சித்தார்த் தேசாய் 24 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜெய்மீத் படேல் 79 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 30 ரன்களில் சித்தார்த் தேசாயும் ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி முன்னிலைப் பெற மூன்று ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் நாக்வஸ்வல்லா 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, கேரளா அணி தங்களில் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதிசெயது. குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 455 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

அதன்பின் ஒரு ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த கேரளா அணியில் ரோஹன் குன்னுமால் 32 ரன்களையும், ஜலஜ் சக்ஸேனா 37 ரன்களையும் சேர்க்க ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களைச் சேர்த்தது. இதனால் கேரளா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிந்தது. இதில் கேரளா அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் காரணமாக ரஞ்சி கோப்பை தொடர் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News