பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து கேசவ் மஹாராஜ் விலகல்!
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடந்து வருகிறது.
இதில் நடந்து முடிந்துள்ள முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டவது ஒருநாள் போட்டி நாளை கேப்டவுனில் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும், அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். அதேசமயம் பணிச்சுமை கரணமாக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாத கேப்டன் டெம்பா பவுமா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணியானது மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹாராஜ் காயம் காரணமாக பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் லெவனில் மஹாராஜுக்கு பதிலாக பெஹ்லுவாயோ இடம்பிடித்திருந்த நிலையில், தற்போது மஹராஜ் இத்தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.
மேற்கொண்டு எதிர்வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கேஷவ் மஹாராஜ் இடம்பிடித்தார். இந்நிலையில் தற்போது அவரால் டெஸ்ட் தொடரில் விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேசமயம் ஒருநாள் தொடரில் இருந்து மஹாராஜ் விலகியதை அடுத்து அவருக்கு மற்று வீரராக ஜோர்ன் ஃபார்டுயின் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானுக்கு எதிரான எஞ்சியுள்ள ஒருநாள் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக கேசவ் மஹாராஜ் விலகியுள்ளார். தற்போது சிகிச்சை மேற்கொண்டு வரும் அவர், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படுவார். அதேசமயம் எஞ்சியுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணியில் ஜோர்ன் ஃபோர்டுயின் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், டோனி டி ஸோர்ஸி, மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், குவேனா மஃபாகா, ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஜோர்ன் ஃபோர்டுயின்.