12ஆவது சீசன் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்திருந்த ஜான்சன் சார்லஸ் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாட்ராக் டெகார்ட்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸும் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரோஸ்டன் சேஸ் மற்றும் பனுகா ராஜபக்ஷா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடி வந்த ரோஸ்டன் சேஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் ராஜபக்ஷா 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்காத நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஸ்டன் சேஸ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன்மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன், சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கமானது கிடைக்கவில்லை. 

அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 16 ரன்களிலும், சுனில் நரைன் 14 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பேரிஸ் ஒருமுனையில் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் மறுபக்கம் விளையாடிய நிக்கோலஸ் பூரன் 17 ரன்களுக்கும், கேசி கார்டி 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதற்கிடையில் அரைசதம் கடந்து அசத்திய பேரிஸும் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 57 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் டிரின்பாகோ அணியின் வெற்றியும் கேள்விக்குறியானது.

ஆனால் அடுத்து களமிறங்கிய கேப்டன் கீரன் பொல்லார்ட் அபாரமாக விளையாடி அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 7 சிக்ஸர்களுடன் 52 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த கீரன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News