ஐபிஎல் 2021: ராகுல் அதிரடியில் 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்!
ஐபிஎல் தொடரின் 26ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், பிரப்சிம்ரான் சிங் இணை களமிறங்கியது. அதில் பிரப்சிம்ரான் சிங் 7 ரான்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து ராகுலுடன் ஜோடி சேர்ந்த கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட மறுமுனையில் இருந்த கே.எல்.ராகுல் அரைசதத்தை பதிவுசெய்தார். பின் 46 ரன்களில் கெய்ல் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த பூரன், ஹூடா, ஷாருக் கான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இருப்பினும் இறுதிவரை போராடிய கே.எல். ராகுல் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் 20 ஓவர்கல் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 91 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.