ராகுல் தனது இடத்தை உறுதிசெய்து கொண்டார் - ரவி சாஸ்திரி!

Updated: Sat, Mar 18 2023 16:31 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சில விக்கெட்களை இழந்த போதும் 5 விக்கெட்கள் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி கண்டது.

இந்திய அணியின் வெற்றியை விட ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது கே.எல்.ராகுலின் பேட்டிங் தான். 39 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறிய போது, தனி ஆளாக போராடிய கே.எல்.ராகுல் 91 பந்துகளில் 75 ரன்களை அடித்து வெற்றிக்கு உதவினார். ஃபார்ம் அவுட்டாகி, அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட ராகுல், துணைக்கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். எனினும் தற்போது அட்டகாசமான கம்பேக் தந்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேசியுள்ளார். அதில், “கே.எல்.ராகுலின் இந்த ஆட்டத்தால் தேர்வுக்குழுவினருக்கு 2 விஷயங்களில் தலைவலியை கொடுத்துள்ளார். முதல் விஷயம் மீதமுள்ள 2 போட்டிகள் தான். ரோஹித் சர்மா அடுத்த போட்டிக்கு வந்துவிட்டால், யாரை ப்ளேயிங் 11ல் இருந்து நீக்குவது என்ற கேள்வி உள்ளது. ஆனால் ராகுல் தனது இடத்தை நன்கு உறுதி செய்துக்கொண்டார்.

2வது விஷயம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்று தான். ராகுல் இதே போல விக்கெட் கீப்பிங் செய்தால் பேட்டிங்கில் நிச்சயம் பெரிய பலம் கூடும். இங்கிலாந்தில் பொதுவாக நீண்ட தூரத்தில் நின்று தான் கீப்பிங் செய்ய வேண்டும். அதற்கு தயாராகும் வகையில் 3 ஒருநாள் போட்டிகள், ஐபிஎல் தொடர் உள்ளது. எனவே அதற்குள் கே.எல்.ராகுல் தனது இடத்தை உறுதி செய்துக்கொள்வார்” என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இதுவரை 9 டெஸ்ட்களில் விளையாடியுள்ள கேஎல் ராகுல் 614 ரன்களை அடித்துள்ளார். அதுவும் இறுதிப்போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்தை அடித்துள்ளார். ரிஷப் பந்த் இல்லாத நேரத்தில் விக்கெட் கீப்பிங் செய்த கேஎஸ் பரத் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. 4 போட்டிகளில் 101 ரன்களை மட்டுமே அடித்தார். எனவே கேஎல் ராகுல் தான் ஒரே தேர்வாக இருப்பார் என தெரிகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை