ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதனால் நடப்பாண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம், மெகா ஏலமாக நடைபெறுகிறது.

Advertisement

பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாத இறுதிக்கு முன்பு ஏலத்தில் பங்கு பெறும் வீரர்களின் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது. 

அதன்படி ஹார்திக் பாண்டியா, ரஷித் கான், ஷுப்மன் கில் ஆகிய வீரர்களை அகமதாபாத் அணி தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா தேர்வாகியுள்ளதாகவும் தெரிகிறது. பாண்டியா, ரஷித் கான் ஆகிய இருவருக்கும் தலா ரூ. 15 கோடி சம்பளமும் ஷுப்மன் கில்லுக்கு ரூ. 7 கோடி சம்பளமும் வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் லக்னோ அணி தேர்வு செய்துள்ள மூன்று வீரர்களின் பெயர்களும் வெளியாகியுள்ளன. கே.எல். ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ஆஸ்திரேலியா), இந்திய இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னாய் ஆகிய வீரர்களைத் தேர்வு செய்திருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

இதில் கே.எல். ராகுலுக்கு ரூ. 15 கோடியும் ஸ்டாய்னிஸுக்கு ரூ. 11 கோடியும் பிஸ்னாய்க்கு ரூ. 4 கோடியும் சம்பளமாக வழங்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது. கேப்டனாக ராகுல் செயல்படவுள்ளார். 

Advertisement

ஐபிஎல் அணிகள் பல பிரபலங்களைத் தக்கவைக்காத நிலையில் ஸ்டாய்னிஸ், பிஸ்னாயின் தேர்வு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இருவரும் திறமையான வீரர்கள் தாம் என்றாலும் அவர்களை விடவும் ஐபிஎல் போட்டியில் சாதித்த பலரைத் தவிர்த்துவிட்டு இவ்விருவரையும் தேர்வு செய்துள்ளார்கள். 

மேலும் பஞ்சாப் அணிக்கு இருமுறை கேஎல் ராகுல் தலைமை தாங்கியும் அந்த அணி இருமுறையும் 6ஆம் இடமே பிடித்தது. இதனால் ராகுலை புதிய அணிக்கு கேப்டனாக்கியிருப்பதும் துணிச்சலான முடிவாகக் காணப்படுகிறது. ஒரு பேட்டராகக் கடந்த நான்கு வருடங்களிலும் 659, 593, 670, 626 ரன்கள் எடுத்து ராகுல் அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News