காயத்தில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய அணியில் இணைந்த மேத்யூ குஹ்னெமன்!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. இதில் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். மேற்கொண்டு இந்திய டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டிற்கும் இந்த தொடரில் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் இந்திய தொடரில் சோபிக்க தவறிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கும் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் லீக் தொடரின் போது ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் மேத்யூ குஹ்னெமன் ஆகியோர் காயமடைந்தார். இதனால் இலங்கை டெஸ்ட் தொடரில் அவர்கள் விளையாடுவார்களா என்ற கேள்விகளும் எழுந்தன. இதில் ஸ்டீவ் ஸ்மித் முழு உடற்தகுதியை எட்டியதுடன் தனது பயிற்சிக்கும் திரும்பியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
அதேசமயம் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு மற்றொரு நற்செய்தியும் கிடைத்துள்ளது. அதன்படி பிபிஎல் தொடரின் போது கட்டை விரலில் ஏற்பட்ட எழும்பு முறிவால் அவதிப்பட்டு வந்த மேத்யூ குஹ்னெமனும் தற்சமயம் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி மேத்யூ குஹ்னெமன் கடந்த புதன்கிழமை ஆஸ்த்திரேலிய டெஸ்ட் அணியில் இணைந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
முன்னதாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த மெத்யூ குஹ்னெமனும் இந்த வாரம் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடுவார் என்ற அறிவிப்பையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அவர் டெஸ்ட் அணியில் இணைந்துள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி இந்த வாரம் துபாயில் பயிற்சியை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னொலி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.