இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரோஹித்துடன் இணைந்த ஷுப்மன் கில்லும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 12ஆவது சதத்தையும், ஷுப்மன் கில் தனது 4ஆவது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றும் அசத்தியது. அதன்பின் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 13 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 103 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டொக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில்லும் 12 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 110 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த அறிமுக வீர தேவ்தத் படிக்கல் - சர்ஃப்ராஸ் கான் இணையும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், 5ஆவது விக்கெட்டிற்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
அதன்பின் 56 ரன்களில் சர்ஃப்ராஸ் கானும், 65 ரன்களில் தேவ்தத் படிக்கலும் தனது விக்கெட்டுகளை இழக்க, பின்னர் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 15 ரன்களிலும், துருவ் ஜுரெல் 15 ரன்களிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த குல்தீப் யாதவ் - ஜஸ்ப்ரித் பும்ர இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 473 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜஸ்ப்ரித் பும்ரா 19 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்கள் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.