மகாராஜா கோப்பை 2024: ரோஹன், சித்தார்த் அதிரடியில் மங்களூரு டிராகன்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Sat, Aug 17 2024 20:52 IST
Image Source: Google

கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் மகாராஜா கோப்பை டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவ்றுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் ஷிவமொக்கா லையன்ஸ் மற்றும் மங்களூர் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மங்களூரு டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன் படி களமிறங்கிய லையன்ஸ் அணியில் கேப்டன் நிஹால் உலால் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரோஹித் 24 ரன்களுக்கும், துருவ் பிரபாகர் 20 ரன்களுக்கும், ராஜ்விர் வத்வா 7 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் இணைந்த அபினவ் மனோஹர் - அவினாஷ் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அவினாஷ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சிவராஜும் 4 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபினவ் மனோஹர் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 3 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 84 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஷிவமொக்கா லையன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மங்களூர் டிராகன்ஸ் அணிக்கு மெக்னீல் ஹாட்லி - ரோஹன் பாட்டில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட்டதுடன, முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெக்னீல் ஹாட்லி 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 43 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹன் பாட்டில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய நிகின் ஜோஸ் 17 ரன்களையும், கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் மங்களூர் டிராகன்ஸ் அணியானது 16.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஷிவமொக்கா லையன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை