Womens T20I Tri-Series: ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத் அதிரடியில் இந்திய அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் மகளிருக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
இதில் தொடக்க வீராங்கனை யஸ்திகா பாட்டியா 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹர்லீனும் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா - ஹர்மன்ப்ரீத் கவுர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்மிருதி மந்தனா 74 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 56 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கூப்பர் முதல் பந்திலேயும், வில்லியம்ஸ் 8 ரன்களிலும், ஷபிகா கஜ்னபி 3 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷெமைன் காம்பெல் - ஹீலி மேத்யூஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட காம்பெல் 47 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹீலி மேத்யூஸ் 34 ரன்களைச் சேர்த்த போதிலும் அந்த அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் இந்திய மகளிர் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அதிரடியாக விளையடிய ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகியாக தேர்வுசெய்யப்பட்டார்.