மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தை இழந்தார் ஸ்மிருதி மந்தனா!
ICC Womens ODI Rankings: சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் பின் தங்கி முதலிடத்தை இழந்துள்ளார்.
இந்திய மகளிர் அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் பிந்தங்கி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட்டும் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
இதுதவிர்த்து ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேறி 5 மற்றும் 6ஆம் இடங்களைப் பிடித்துள்ளனர். மேற்கொண்டு இங்கிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 10 இடங்கள் முன்னேறி 11ஆம் இடத்திற்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் இரண்டு இடங்கள் முன்னேறி 13ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதேசமயம் அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 12 இடங்களும், ஏமி ஹண்டர் 2 இடங்களும், இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் இடங்களும், ஹர்லீன் தொயோல் இரண்டு இடங்களும், சோபியா டங்க்லி இரண்டு இடங்களும், எம்மா லம்ப் 19 ரன்களும், ஆலிஸ் டேவிட்சன் 25 இடங்களும், அயர்லாந்தின் அர்லின் கெல்லி இரண்டு இடங்களும், சாரா ஃபோர்ப்ஸ் 13 இடங்களும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இன்றி இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் இரண்டாம் இடத்தையும், மேகன் ஷட் 3ஆம் இடத்திலும், இந்திய அணியின் தீப்தி சர்மா நான்காம் இடதையும் தக்கவைத்துள்ளனர். இதில் இங்கிலாந்து தொடரில் அபாரமாக செயல்பட்ட கிராந்தி கௌட் 58 இடங்கள் முன்னேறி 62ஆவது இடத்தையும், ராதா யாதவ் 7 இடங்கள் முன்னேறி 100ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.