நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
]ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
அதன்படி மிட்செல் மார்ஷ் தலைமையிலான இந்த அணியில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களுடன் மார்கஸ் ஸ்டொய்னிஸ், மேத்யூ வேட், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், டேவிட் வார்னர் போன்ற நட்சத்திர வீரர்களும் அணியில் இடம்பிடித்திருந்தனர்.
இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் நியூசிலாந்து தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மூன்றாவது டி20 போட்டியில் விளையாடமல் இருந்த நிலையில், தற்போது நியூசிலாந்து தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய டி20 அணியில் ஆரோன் ஹார்டி சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலிருந்து விலகியுள்ளதாகவும், எஞ்சியிருக்கும் போட்டிகளில் அவர் பங்கேற்பார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இப்படி வீரர்கள் அடுத்தடுத்து தொடரிலிருந்து விலகியுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணி: மிட்செல் மார்ஷ் (கே), பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆரோன் ஹார்டி, மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.