கிரிக்கெட்டில் இருந்து நான்கு மாத காலம் விலகும் மார்க் வுட்!

Updated: Thu, Mar 13 2025 20:38 IST
Image Source: Google

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

அதேசமயம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக இத்தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது. இதனையடுத்து அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகுவதாகவும் அறிவித்தார். இதன் காரணமாக அந்த அணியின் அடுத்த கேப்டனை நியமிக்கும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. 

இந்நிலையில் தற்போது அந்த அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக 4 மாதங்களுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது, இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்டுக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில், இடது முழங்காலில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக மார்க் வுட் குறைந்தது அடுத்த 4 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது தற்போது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Also Read: Funding To Save Test Cricket

ஏனெனில் மார்க் வுட்டின் காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரால் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதன்படி இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நவம்பரில் நடபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை