இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச வாய்ப்பில்லை!

Updated: Wed, Sep 11 2024 13:44 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பௌல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீசுவாரா என்ற கேள்விகள் அதிகரித்துவருகின்றன. ஏனெனில் முன்னதாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக தொடரின் பாதியிலேயே விலகியதுடன் மேற்சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார்.

அதன்பின் ஆஸ்திரேலிய அணி மருத்துவர்களுடன் இணைந்து தனது உடற்தகுதியை மேம்படுத்தியதுடன், அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்றிருந்தார். ஆனாலும் அவர் பேட்டிங்கில் மட்டுமே தனது பங்களிப்பை வழங்கி வந்த நிலையில், பந்துவீசுவதை முழுமையாக தவிர்த்தார். இதன் காரணமாக அவர் இந்த தொடரிலாவது பந்துவீசுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மிட்செல் மார்ஷ், “நான் எனது உடற்தகுதிய மீட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். நான் அதிகமாக பந்து வீச விரும்பவில்லை. அதேசமயம் என்னுடைய நேர்மையான பதில் என்னவெனில், எங்கள் அணிக்குள் நிறைய பந்துவீச்சாளர்கள் கிடைத்திருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம், எனவே நாங்கள் எப்படி செல்கிறோம் என்று பார்ப்போம். அதற்கேற்து போல் நான் எனது பந்துவீச்சு குறித்து ஆலோசித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரிலும் மிட்செல் மார்ஷ்  பந்துவீச வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 42 டெஸ்ட், 89 ஒருநாள் மற்றும் 64 டி20 போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 36 அரைசதங்கள் என 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும், பந்துவீச்சில் 121 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியா டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கானொலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து டி20 அணி: பில் சால்ட் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், சாம் கர்ரன், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, அடில் ரஷித், ஜேமி ஓவர்டன், ரீஸ் டாப்லி மற்றும் ஜான் டர்னர்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை