உலகக்கோப்பை தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்த கும்ப்ளே, ஹைடன்!

Updated: Tue, Nov 14 2023 14:12 IST
Image Source: Google

ஐசிசி உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில், உலகக்கோப்பையின் சிறந்த அணியையும் அந்த நான்கு அணிகளில் இருந்து மட்டுமே கும்ப்ளே மற்றும் ஹெய்டன் தேர்வு செய்தனர்.

தொடக்க வீரர்களாக தென் ஆப்பிரிக்காவின் க்வின்டன் டி காக் மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்தனர். டி காக் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ரோஹித் சர்மா 503 ரன்கள் குவித்து நான்காவது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 499 ரன்கள் குவித்த போதும் அவரை தேர்வு செய்யவில்லை.

அடுத்து பேட்டிங்கில் மூன்று மற்றும் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய விராட் கோலி மற்றும் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவை தேர்வு செய்தனர். விராட் கோலி 594 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ரச்சின் அதே பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ரச்சின் தொடக்க வீரராக அல்லது மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்து வந்தாலும் நான்காம் வரிசையிலும் களமிறக்கலாம் என கும்ப்ளே கூறினார்.

அடுத்து ஐந்து மற்றும் ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்ய ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசெனை தேர்வு செய்தனர். அவர்களை தேர்வு செய்ய முக்கிய காரணமாக அவர்களின் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இருப்பதை குறிப்பிட்டார் மேத்யூ ஹெய்டன், மேக்ஸ்வெல் ஆஃப்கானிஸ்தான் போட்டியில் 201 ரன்கள் அடித்ததையும் குறிப்பிட்டார்.

அடுத்து பந்துவீச்சில் ஸ்பின்னர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பாவை தேர்வு செய்தனர். ஸாம்பா அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஜடேஜா ஏழாவது இடத்தில் இருக்கிறார். அவர் ஆல் ரவுண்டர் என்பதால் அவரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கும்ப்ளே கூறினார். வேகப் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்காவின் மார்கோ ஜான்சென், இந்தியாவின் முகமது ஷமி, பும்ராவை தேர்வு செய்தனர்.

உலகக்கோப்பையின் சிறந்த அணி : குயின்டன் டி காக், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரச்சின் ரவீந்திரா, கிளென் மேக்ஸ்வெல், ஹென்ரிச் கிளாசென், ரவீந்திர ஜடேஜா, மார்கோ ஜான்சென், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, ஆடம் ஸாம்பா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை