AUS vs WI, 3rd ODI: தொடரிலிருந்து விலகிய மேத்யூ ஷார்ட், பென் மெக்டர்மோட் சேர்ப்பு!

Updated: Mon, Feb 05 2024 13:18 IST
AUS vs WI, 3rd ODI: தொடரிலிருந்து விலகிய மேத்யூ ஷார்ட், பென் மெக்டர்மோட் சேர்ப்பு! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரை இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் சமன்செய்த நிலையில், ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கான்பெர்ராவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், இத்தொடரில் ஆறுதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட் காயமடைந்தார். இதனால் நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் செய்த கையோடு அவர், ஃபீல்டிங்கிற்கு வரவில்லை. இந்நிலையில் மேத்யூ ஷார்ட்டின் காயம் தீவிரமடைந்துள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து அவர் விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மேத்யூ ஷார்ட்டிற்கு மாற்று வீரராக அதிரடி தொடக்க வீரர் பென் மெக்டர்மோர் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்த அறிமுக வீரர் ஸேவியர் பார்ட்லெட்டும் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணிக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், ஸேவியர் பார்ட்லெட், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கேமரூன் க்ரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட் (துணை கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுஷாக்னே, லான்ஸ் மோரிஸ், பென் மெக்டெர்மோட், ஆடம் ஸாம்பா, வில் சதர்லேண்ட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை