உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: ராகுல் டிராவிட்டை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை அஹ்மதாபாத் நகரில் நடைபெறுகிறது. இதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி வாகை சூடிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்காக பலப்பரீட்சை நடத்துவதற்கு தயாராக இருக்கின்றன.
குறிப்பாக 2023 சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்ததை போல இம்முறையும் வென்று தங்களுடைய 6ஆவது கோப்பையை முத்தமிட ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 வெற்றிகள் பெற்று மிரட்டலான ஃபார்மில் இருக்கும் இந்தியா 2003 உலகக்கோப்பை தோல்விக்கு ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து 2011 போல சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
இந்நிலையில் தங்களுடைய தொடர்ச்சியான வெற்றிகளில் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட் முக்கிய பங்காற்றி வருவதாக கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். எனவே இந்த உலகக் கோப்பையை அவருக்காகவும் சேர்த்து வெல்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
இதுகுறித்து பேசிய அவர், “அவருடைய வேலை கண்டிப்பாக பெரியதாக இருக்கிறது. நான் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் அந்த தெளிவை பெறுவதில் அவருடைய பங்கு முற்றிலும் மகத்தானது. நான் சிந்திக்கும் ஒரு விஷயத்தில் பயிற்சியாளர் சில விஷயங்களுக்கு உடன்பாடில்லை என்பது மற்றொன்றாகும். ராகுல் பாய் எப்படி கிரிக்கெட்டில் விளையாடினார் என்பதையும் நான் எப்படி விளையாடுகிறேன் என்பதும் உங்களுக்கு தெரியும்.
வெளிப்படையாக அது மாறுபட்டது. ஆனாலும் நாங்கள் விளையாட விரும்பும் வழியில் சென்று சுதந்திரமாக விளையாடுவதற்கு போதுமான ஆதரவை கொடுப்பது அவரைப் பற்றி நிறைய சொல்லும். குறிப்பாக அரையிறுதி வரை சென்று தோல்வியை சந்தித்த 2022 டி20 உலகக் கோப்பை போன்ற கடினமான நேரங்களில் அவர் அணி வீரர்களுக்காக நின்றார்.
அது போன்ற கடினமான நேரங்களில் அவர் ரியாக்ட் செய்து அதை இந்திய வீரர்களுக்கு தகவல்களாக கொடுத்த விதம் உதவியாக இருந்தது. எனவே அவரும் இந்த மிகப்பெரிய போட்டியில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார். அவருக்காக நாங்கள் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ரோஹித் கூறுவது போல சச்சினுக்கு அடுத்தபடியாக சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்த டிராவிட் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்ற போதிலும் ஒரு வீரராக உலகக் கோப்பையை வென்றதில்லை. எனவே இம்முறை அவர் பயிற்சியாளராக கோப்பையை முத்தமிட்டால் அது நிச்சயம் இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியானதாக அமையும்.