ஐசிசி ஒருநாள் தரவரிசை: முகமது சிராஜை பின்னுக்கு தள்ளி கேசவ் மகாராஜ் முதலிடம்!

Updated: Wed, Nov 15 2023 12:51 IST
Image Source: Google

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் அனைத்து லீக் போட்டிகளிலும் முடிந்துவிட்டது. இதனிடையே, அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணியும், 4ஆவது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. நவம்பர் 16-ஆம் தேதி கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில், ஐசிசி சர்வதேச ஒரு நாள் போட்டிகளின் சிறந்த பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஷுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார். கோலி 4ஆவது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5ஆவது இடத்திலும் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 5 இடத்திற்குள் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் முகமது சிராஜை பின்னுக்கு தள்ளி தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதில் இந்திய வீரர்களான சிராஜ் 2-வது இடத்திலும், பும்ரா 4-வது இடத்திலும், குல்தீப் யாதவ் 5-வது இடத்திலும் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையைப்போல் பந்து வீச்சாளர்கள் தரவரிசையிலும் முதல் 5 இடத்திற்குள் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல் ரவுண்டர் தரவரிசையில் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். இதில் இந்திய வீரர் ஜடேஜா 10ஆவது இடத்தில் உள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை