காயம் காரணமாக ஆஸ்திரேலியா ஏ அணியில் இருந்து மைக்கேல் நேசர் விலகல்!
இந்திய ஏ அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதால் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி வெற்றிபெற்று அசத்திய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது இன்று மெல்போர்னில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற் ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், அபிமன்யூ ஈஸ்வரன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், சாய் சுதர்ஷன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் இந்திய ஏ அணி 11 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த தேவ்தத் படிக்கல் - துருவ் ஜூரெல் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்தனர். இதுல் தேவ்தத் படிக்கல் 26 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய நிதீஷ் ரெட்டி 16 ரன்னிலும், அடுத்து வந்த தனுஷ் கோட்டியான் ரன்கள் ஏதுமின்றியும், கலீல் அஹ்மத் ஒரு ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜூரெல் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 80 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளையும், பியூ வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய மைக்கேல் நேசர் காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி இப்போட்டியின் போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் இனி இப்போட்டியில் பந்துவீச முடியாது என கூறப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் அவரது காயம் குறித்து முழுமையாக அறிய ஸ்கோன் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதனால் இப்போட்டியில் இருந்து அவர் விலகியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் பேக்கப் வீரராகவும் உள்ளார். இந்நிலையில் காயம் காரணமாக அவர் இந்த தொடரில் விளையாடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது.