ஐபிஎல் 2025: மேக்ஸ்வெல்லிற்கு பதிலாக மிட்செல் ஓவனை ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் கிங்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தொடரில் நாளை நடைபெறும் 54ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தியது.
இதனால் அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இப்போட்டியில் அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்லிற்கான மாற்று வீரரை அந்த அணி அறிவித்துள்ளது.
அந்தவகையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிரடி ஆல் ரவுண்டர் மிட்செல் ஓவனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 34 டி20 போட்டிகளில் விளையாடிவுள்ள மிட்செல் ஓவன் இரண்டு சதங்களுடன் 646 ரன்களையும், 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளர். அதிலும் குறிப்பாக நடந்து முடிந்த பிக் பேஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் ஓவன் சதமடித்து அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் மேக்ஸ்வெல் குறித்து பேசினால், நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 7 போட்டிகளிலும் சேர்த்து பேட்டிங்கில் 8 என்ற சராசரியில் 97 என்ற ஸ்டிரைக் ரேட்டில் மொத்தமாகவே 48 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேற்கொண்டு கடந்த சில ஐபிஎல் சீசன்களாகவே கிளென் மேக்ஸ்வெல்லின் ஐபிஎல் ஃபார்ம் மிக மோசமாக இருந்துள்ளது.
இதனால் இனிவரும் ஐபிஎல் தொடரிலும் கிளென் மேக்ஸ்வெல்லை வாங்க எந்த அணியும் முன்வராது என்ற கருத்துகளும் வலம் வருகின்றன. இந்நிலையில் தான் பஞ்சாப் கிங்ஸ் அணி அவருக்கு பதிலாக மிட்செல் ஓவனை ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மிட்செல் ஓவன் ஐபிஎல் தொடரிலும் ஆதிக்கம் செலுத்துவாரா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Also Read: LIVE Cricket Score
பஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஓவன்*, ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ், லோக்கி ஃபெர்குசன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்னூர் பண்ணு, குல்தீப் சென், பிரியன்ஸ் ஆர்யா, ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே, நேஹால் வதேரா.