எம்எல்சி 2023: பிராவோ அதிரடி வீண்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வாஷிங்டன் ஃப்ரீடம் த்ரில் வெற்றி!

Updated: Mon, Jul 17 2023 12:30 IST
எம்எல்சி 2023: பிராவோ அதிரடி வீண் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வாஷிங்டன் ஃப்ரீடம் த்ரில் வெற்றி (Image Source: Google)

அமெரிக்காவில் ஆறு அணிகளை வைத்து மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், வாஷிங்டன் பிரீடம் அணியும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் கேப்டன் மோசஸ் ஹென்றிகுயூஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி களமிறங்கிய வாஷிங்டன் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய மேத்யூ ஷார்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் மொத்தம் 50 பந்துகளை எதிர் கொண்டு பத்து பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் அபாரமாக விளையாடி 80 ரன்கள் குவித்தார். இதற்கு அடுத்து அந்த அணியில் யாரும் பெரிதான எந்த பங்களிப்பையும் அளிக்கவில்லை. இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் கோட்ஸி 26 ரன்களுக்கு இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து விளையாட வந்த சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் கான்வே இருவரும் ஏமாற்றம் அளித்தார்கள். கடந்த ஆட்டத்தில் ஃபாஃப் முதல் பந்தில் ஆட்டம் இழந்து இருக்க, இந்த முறை கான்வே முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். இவர்கள் இருவரும் முறையே 14, 0 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

இதற்கடுத்து வந்த லகிரு மிலிந்த 15, டேவிட் மில்லர் 14, மிலிந்த் குமார் 3, மிட்சல் சான்ட்னர் 22, கால்வின் சாவேஜ் 7, ஜெரால்டு கோட்ஸி 1 ரன் என எடுத்து அடுத்தடுத்து வெளியேறிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் மற்றொரு முனையில் நின்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மாறி இருக்கும் டுவைன் பிராவோ அதிரடியில் தன்னை மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் இறக்க வேண்டும் என்கின்ற அளவுக்கு விளையாடினார். 

பிராவோ மொத்தமாக 39 பந்துகளை சந்தித்து ஐந்து பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் கடைசி வரை நின்றார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரை அன்ட்ரிச் நோர்க்கியா வீசினார். அந்த ஓவரில் மொத்தமாக பிராவோ 20 ரன்கள் விளாசினார்.

பிராவோ அதிரடி ஆட்டத்தை சுவாரசியமாக மாற்றினாலும் சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிக்கு கொண்டு செல்லும் அளவுக்கு இல்லை. இறுதியில் சூப்பர் கிங்ஸ் அணி போராடி 6 ரன்கள் வித்தியாசத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியிடன் தோல்வியடைந்தது. இப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட மேத்யூ ஷார்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை