உலகெங்கிலும் டி20 கிரிக்கெட் தொடரின் மீதான ஈர்ப்பின் காரணமாக அனைத்து நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றன. அந்தவகையில் அமெரிக்க கிரிக்கெட் சங்கம் தரப்பில் கிரிக்கெட்டை வளர்க்கும் முயற்சியில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 தொடரை கடந்த ஆண்டு தொடங்கியது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கடந்த சீசனிற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இத்தொடரின் இரண்டாவது சீசனானது இன்று கோலாகலமாக தொடங்கியது. 

Advertisement

இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியும், இரண்டாம் இடம் பிடித்திருந்த சியாட்டில் ஆஸ்கர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி மோரிஸ்வில்லேவில் உள்ள சர்ச் ஸ்ட்ரீட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூயார்க் அணி முதலில் பந்துவிசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சியாட்டில் அணிக்கு டி காக் மற்றும் நௌமன் அன்வர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நௌமன் அலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து குயின்டன் டி காக்கும் 5 ரன்களோடு நடையைக் கட்டினார். 

Advertisement

அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் ஜோன்ஸ் 12 ரன்களுக்கும், ஹென்ரிச் கிளாசென் 5 ரன்களுக்கும், இமாத் வசிம் 3 ரன்களிலும், மைக்கேல் பிரேஸ்வெல் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.  மேற்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுபம் ரஞ்சனே 35 ரன்களுக்கும், ஹர்மீத் சிங் 20 ரன்களிலும் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக சியாட்டில் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூயார்க் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

பின்னர் எளிய இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் அணியிலும் தொடக்க வீரர்கள் ருபென் கிளிண்டன் 6 ரன்களிலும், மொனாங்க் படேல் 8 ரன்களிலும், ஷியாம் ஜஹாங்கீர் 3 ரன்களிலும், டிம் டேவிட் 12 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். ஆனாலும் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது 14.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சியாட்டில் ஆஸ்கர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன் மூலம் நடப்பு சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரையும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News