அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மொரிஸ்வில்லேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூயார்க் அணிக்கு ரூபென் கிளிண்டன் - மொனாங்க் படேல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மொனாங்க் படேல் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜஹாங்கீர் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஆதேசமயம் நிதானமாக விளையாடி வந்த மொனாங்க் படேல் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிம் டேவிட் 9 ரன்களுக்கும், கேப்டன் கீரென் பொல்லார்ட் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்கம், மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ரஷித் கான் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்தாலும், மற்ற வீரர்கள் யாரும் போதிய ரன்களைச் சேர்க்கவில்லை.
இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை மட்டுமே எடுத்தது. வாஷிங்டன் ஃப்ரீடம் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சௌரப் நேத்ரவால்கர் மற்றும் தில் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணியில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதேசமயம் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவன் ஸ்மித் பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதன்மூலம் வாஷிண்டன் ஃப்ரீடம் அணி 7.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் தடைப்பட்டது. அதன்பின்னரும் மழை தொடர்ந்த காரணத்தால் இப்போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது.
ஆச்சமயத்தில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது 4 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்த காரணத்தால் இப்போட்டியின் முடிவானது அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது. இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது 4 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சௌரப் நேத்ரவால்கர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.