வாய்ப்பு கிடைத்தால் டி20 உலகக்கோப்பையில் அசத்த தயாராக உள்ளேன் - முகமது ஷமி!

Updated: Tue, Jan 09 2024 11:39 IST
Image Source: Google

நட்சத்திர கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கடந்த 10 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முதன்மை பவுலராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2015 உலகக் கோப்பைக்கு பின் அனுபவத்தால் முன்னேறிய அவர் 2019 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்து அசத்தினார். அதை விட 2023 உலகக் கோப்பையில் முதல் 4 போட்டிகளில் விளையாடாத அவர் காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பற்றார்.

அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய அவர் மொத்தம் 24 விக்கெட்டுகள் எடுத்து எதிரணிகளை தெறிக்க விட்டு இந்தியா இறுதிப்போட்டியில் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். குறிப்பாக அரையிறுதியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி நியூசிலாந்தை முதல் முறையாக தோற்கடிக்க உதவிய அவர் ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றின் நாக் அவுட் போட்டியில் 6 விக்கெட்களை எடுத்த முதல் பவுலர் என்ற மாபெரும் சரித்திரம் படைத்தார்.

மேலும் மொத்தமாக 24 விக்கெட்டுகள் எடுத்த அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையும் படைத்தார். இருப்பினும் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க தொடரில் காயத்தால் அவர் காயத்தால் விலகியது முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்க முக்கிய காரணமானது.

இந்நிலையில் அடுத்ததாக நடைபெற உள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வருவதாக ஷமி கூறியுள்ளார். அதை விட 2024 டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைத்தால் 2023 உலகக்கோப்பை போலவே அசத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,“2023 உலகக் கோப்பையில் அசத்தியது என்னுடைய வாழ்வின் மிகப்பெரிய சாதனையாகும்.

அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் விரும்பும் இந்த விளையாட்டில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். என்னுடைய அந்த கனவை செய்வதற்கு எனது குடும்பம் கொடுக்கும் ஆதரவும் அபாரமாக இருக்கிறது. அமரோஹா முதல் இந்திய அணி வரை என்னுடைய பயணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நாட்டுக்காக எப்போதுமே சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு நான் முடிந்தளவுக்கு தயாராகி வருகிறேன். டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை பல தருணங்களில் நான் தேர்வு செய்யப்படுவேனா இல்லையா என்பது தெரியாது. ஆனால் டி20 உலகக் கோப்பைக்கு முன் ஐபிஎல் தொடர் நடைபெறுவது சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த உதவும். ஒருவேளை அணி நிர்வாகம் விரும்பினால் நான் அந்த தொடரில் விளையாட தயாராக இருக்கிறேன்” என்று கூறினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை